எளிமையின் மறு பெயர் தோழர். நல்லக்கண்ணு.

11:10 AM |
தோழர். நல்லக்கண்ணு
 
தன் பெயருக்கு தகுந்தாற்போல் இந்த உலகில் மிக உயரிய நல்லெண்ணத்தோடு வாழக்கூடிய மிக எளிமையான மனிதர். எளிமை, நேர்மை, வாய்மை என்ற மூன்று குணங்களை தன்னோடு எப்பொழுதும் வைத்திருக்கும் மிக அமைதியான, நேர்மையான அரசியல்வாதி.
 
2008 ஆம் ஆண்டு என நினைக்கிறேன், ஒருமுறை சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் பாலன் இல்லத்திற்கு (இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகம்) அவரை நானும் எனது நண்பர் குணசேகரன் அவர்களும் கோவை சிறைவாசிகள் சம்பந்தமாக நாங்கள் நடத்த இருந்த ஒரு புத்தக வெளியீடு நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் கொடுக்க சென்றிருந்தோம். வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஒரு தோழரிடம் நாங்கள் வந்த விவரத்தை கூறிய போது நல்லக்கண்ணு ஐயா அவர்கள் இருக்கும் இடத்தை எங்களிடம் காட்டினார். அலுவலகத்தின் முதல் தளத்தில் இறுதியாக அமைந்திருக்கும் ஒரு அறையில் அவர் தங்கி இருப்பதை தெரிந்து கொண்டு அந்த இடம் நோக்கி விரைந்தோம்.
 
இந்தியா முழுவதும் பரவி இருக்கக்கூடிய ஒரு மாபெரும் கட்சியின் தலைவர், கம்முநிஸ்ட் இயக்கத்தின் போர் வாள், தனது அரசியல் வாழ்வை 15 ஆம் வயதிலேயே ஆரம்பித்த இளைஞர், மிக தீவிர அரசியலில் ஈடுபட்டதனால் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சிறை போராளி, சிறப்பு வாய்ந்த பல விருதுக்களை பெற்ற உயர்வானவரை பார்க்க போகிறோம் என்ற ஒரு சிறு தயக்கத்தோடு அவர் இருக்கும் அறையை அடைந்தோம். கதவு திறந்தே இருந்தது. அனுமதி பெற்று உள்ளே சென்றோம். மிக அமைதியான குரலில் வரவேற்று எங்களை அமர சொன்னார். அமர்ந்த நானும் தோழர். குணசேகரன் அவர்களும் அந்த அறையை சுற்றி பார்த்தவண்ணம் இருந்தபோது நல்லக்கண்ணு ஐயா அவர்களிடம் குணசேகரன் பேச தொடங்கினார். அப்பொழுது அறையை பார்த்துகொண்டிருந்த நான் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டேன். இதுவரை நான் கண்டதில் இது போன்ற ஒரு எளிய மனிதரை நான் என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. ஒரு சிறு ஜன்னல் வழியே வரும் வெளிச்சம் அங்கு பரவியிருக்கிறது. இரவு நேரத்தில் வெளிச்சம் தேவைப்படும் என்று ஒரேயொரு 40 வாட்ஸ் மின் விளக்கு அந்த அறையில் தொங்கி கொண்டிருக்க, நிறைய புத்தகங்களும், அவர் அமருவதற்கு ஒரு நாற்காலியும், எழுதுவதற்கு ஒரு மேசையும் மட்டுமே இருந்தது. சந்திக்க வரும் விருந்தாளிகள் அமருவதற்கு நீண்ட பெஞ்சும் (bench)அத்தோடு அவர் படுத்து உறங்குவதற்கு கோர பாய் ஒன்று தலையனையோடு சுற்றி வைக்கப்பட்டிருந்தது. இரவில் தூங்க செல்லும் நேரத்தில் நாங்கள் அமர்ந்திருந்த பலகை பெஞ்ச் (bench ) அவர் படுத்துறங்கும் கட்டில். அவ்வளவுதான். இதை தவிர அவருடைய அறைக்கு வெளியில் உள்ள நடைபாதையில் ஒரு வேட்டி சட்டை துவைத்து காய போடப்பட்டிருந்தது. அதுவும் அவரே துவைத்து காய போட்டிருக்கிறார். நான் நினைத்து வந்த அத்தனை கணிப்புகளையும் புரட்டி போட்டது இந்த சந்திப்பு.
 
அப்பொழுது என் மனதில் நபி (ஸல்) அவர்களை உமர் (ரலி) அவர்கள் சந்திக்க வந்த காட்சி நினைவில் ஓடியது. மக்களுக்கு உன்னத வாழ்வியல் நெறியை போதித்த உலகத்தின் அருட்கொடை நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்கையை அமைத்து கொண்ட விதத்தை பார்த்து உமர் அவர்கள் அழுகிறார்கள்.
ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசர்கள் எல்லாம், தங்க உணவு தட்டில் உணவு உண்டிடும் போது அல்லாஹ்வின் தூதர் நீங்கள் இந்த காயிற்று கட்டிலில் உறங்குவது எனக்கு வேதனை அளிக்கிறது என அழுதார் உமர். அதை கண்ட நபிகள் நாயகம் "உமரே" இந்த உலக வாழ்வு ஒரு அற்பம் என உங்களுக்கு தெரியாதா ? என சப்தமாக கூறும்போது உமர் தன்னுடைய அழுகையை நிறுத்தினார் என இஸ்லாமிய வரலாறு நமக்கு போதிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு தலைவரை, இறை தூதரை பின்பற்றும் நாம் எவ்வாறு இந்த உலகில் வாழ்கிறோம் என்பதை ஒரு கணம் நினைத்து பார்த்தேன்.
 
ஆனால், இஸ்லாமிய கொள்கையை வாழ்வியல் நெறியாக ஏற்காவிட்டாலும் தன்னுடைய வாழ்வை இஸ்லாம் காட்டும் வழியில் எளிமையாக வாழ்ந்திடும் ஐயா நல்லக்கண்ணு அவர்களை கண்டு ஆச்சரியம் அடைந்தேன். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த சத்திய மார்கத்தை அவர் ஏற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காக இருகரம் ஏந்துகிறேன். நீங்களும் எந்திடுங்கள் ........
Read more…