போராளிகளே......

4:29 PM |



போராளிகளே....

 சிறைபட்ட உங்களின் பாதங்கள் இம்மாதத்தோடு  15 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும் 1998 நவம்பர் கலவரத்தில் படுகொலை செய்யப்பட 19 முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லையே..... ?
 
படுகொலை செய்யப்பட்டவர்கள் சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் என்பதாலா ?
படுகொலைக்கு நீதி கேட்டு கோவை வீதிகளில் முழக்கமிட்ட ஒரே காரணத்தினால், உன்னை தீவிரவாதி என்று கைது செய்து சிறையில் தள்ளியது காவல் துறை.

நிச்சயமாக நீ ஒரு தீவிரவாதி அல்ல, சமூக போராளி என்பதை நாங்கள் மட்டுமல்ல, உண்மைக்காக போராடும் ஒவ்வொரு இளைஞனும் அறிந்தே வைத்திருக்கின்றான்.

அனுமானத்தின் அடிப்படையிலும் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த மட்டுமே இன்று நீதிமன்றங்கள் இயங்குகின்றன.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை நியாயப்படுத்தவே மீடியாக்கள் இயங்குகின்றன.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தையும், சிறுபான்மை சமுதாயத்தையும் குறி வைத்தே கைது படலங்களை கட்டவிழ்த்து விடுகிறது நம் காவல்துறை.

நேற்றைய செய்தி பழையது, இன்றைய செய்தி புதியது என நாட்களை கூட மெகா சீரியல்களை போல நினைக்கும் மக்கள் மத்தியில்தான் இன்று வரலாறை நினைவூட்ட வேண்டிய அவல நிலை.

உன் விடுதலைக்கு என்றும் கைய்யேந்திடும் அன்பு நெஞ்சங்கள் இன்றும், என்றும் இந்த பூமியில் வாழ்கிறது என்பதை மட்டும் மறந்துவிடாதே. சோர்ந்துவிடாதே, துவண்டுவிடாதே.

உண்மை ஒரு நாள் வெல்லும்....

Read more…

விடுதலை பெற்றும் மறு சிறைவாசம்

12:59 PM |


அப்துல் நாசர் மாதனி.
வெகு சீக்கிரத்தில் மக்கள் அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர். மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர். அனல் பறக்கும் மேடைப்பேச்சு. தூங்கிய இஸ்லாமிய இளைங்கர்களை தட்டி எழுப்பியவர். கேரளாவின் பழனி பாபா என்று தமிழ் முஸ்லிம்களால் அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படுபவர். இந்தியாவை ஹிந்து நாடாக்க வேண்டும் என அனுதினமும் திட்டம் தீட்டிடும் பாசிச பயங்கரவாதிகளை மேடைகள்தோறும் எதிர்த்தவர்.  RSS பயங்கரவாதிகள் எறிந்திட்ட குண்டினால் தன் ஒரு காலை இழந்தவர் என இவருடைய வீர வரலாற்றினை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பத்து ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் நிரபராதி என கோவை விரைவு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர் இன்று கர்நாடகத்திலே மறு சிறை கண்டு கொண்டிருக்கிறார். அரசினுடைய பாரபட்ச பட்டியலிலே இவருடைய பெயரும் இடம்பிடித்துள்ளது. கடந்த மாதம் ஜனவரி 25 ஆம் தேதி இவருடைய பிணை கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ள செய்தியை கண்டு மிகவும் கவலை அடைந்தோம். ஆயிரக்கணக்கான முஸ்லிம் சகோதரர்களின் ரத்தத்தில் சோப்பு போட்டு குளித்த நரேந்திர மோடி இன்று உல்லாசமாய் சுற்றித்திரிய மாதனி போன்ற உரிமைப்போராளிகள் தொடர்ந்து சிறை காணுவார்கள் என்பதில் வியப்பேதுமில்லை. திட்டமிட்ட சதி இன்னும் எம் இந்திய மண்ணில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றுமொரு சாட்சி இது.

மாதனி அவர்கள் கடந்த 2010 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் கர்நாடகத்தை ஆளும் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சியினால், 2008 ஆம் ஆண்டு நடந்த பெங்களுரு குண்டுவெடிப்பு வழக்கில் 31  வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு மறுபடியும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து தெஹல்கா பத்திரிக்கை வெளியிட்டிருந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது.  "Why this Man still in Prison" "ஏன் இந்த மனிதர் இன்னும் சிறையில் இருக்கிறார்" என்ற தலைப்பில் வெளிவந்திருந்த அந்த கட்டுரையில் PDP கட்சியின் கேரளா மாநிலம் காசர்கோடு தலைவர் சுபைர் தந்த தகவல்களை படித்துவிட்டு ஒன்றை மட்டும் புரிந்து கொண்டோம் அது என்னவென்றால், பாசிசத்தை சட்டமாக்க துடிக்கும் கர்நாடக பாரதிய ஜனதா அரசு இந்த உடல் ஊனமுற்ற சகோதரன் சாகும்வரை விடமாட்டார்கள் போலும். 
சுபைர் கூறியிருந்தார்; " நான் மாதனி அவர்களை சந்தித்தப்பொழுது மிகவும் களைப்பாக காணப்பட்டார். அவரின் கண் இமைகளின் கீழ்பகுதி மிகவும் கருப்பாக காணப்பட்டது. நான் மாதனி அவர்களிடத்தில் காரணம் கேட்டப்பொழுது அவர் சொன்னார், சிறைப்பட்ட நாளிலிருந்து ஒரு நாளும் என் அறையில் எறியும் எந்த ஒரு விளக்கையும் காவலர்கள் அமர்தியதே இல்லை. மிக பிரகாசமான விளக்குகளும், நவீன கேமராக்களும் என 24 X 7  எரிந்துகொண்டே இருப்பதினால் என்னால் உறங்கமுடியவில்லை. அந்த கேமராக்கள் என் கழிவறையும் விட்டு வைக்கவில்லை" என்பதுதான் அந்த செய்தி. பத்து வருட காலம் இன்னல்களையும், துன்பங்களையும் சுமந்து கழித்திட்ட பின்னர் நிரபராதி என்று நீதிமன்றம் சொன்ன பிறகு, தன் நெஞ்சுயர்த்தி வெளி சென்றாயே, இன்று மறுபடியும் சிறைபட்டாயே எத்தனை சோதனைகள் ?

இவர் எங்களோடு கோவை சிறையில் பழகிய நாட்கள் மறக்கமுடியாதவை. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தாலும் அரசு புனைந்திட்ட பொய் வழக்குகள் எங்கள் மத்தியில் உண்மை நட்பையும், இஸ்லாமிய சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தியது. மிக கம்பீரமான உடல், சுன்னத்தான தாடி, ஒரு கால் இல்லாவிட்டாலும் மறு காலை வைத்து மகிழ்ச்சி கண்டவர் மாதனி அவர்கள். இறைவன் நாளை மறுமையில் என்னிடத்தில் என் ஒரு காலை பற்றிய கேள்விக்கு நான் இங்கேயே பதில் வைத்திருப்பவன் என அடிக்கடி எங்களை ஈமானை தேற்றுபவர்.

இஸ்லாமிய கல்வி ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மிக அவசியம் என்பதை எப்போதும் வலியுறுத்துபவர். சிறை கொட்டகையின் சுவற்றில் கருப்பு சாயம் பூசி, சுண்ணாம்பு குச்சிகளால் எங்களுக்கு அரபு பாடம் நடத்தியவர். அனுதினமும் எங்களை சந்தித்து மார்க்க விஷயங்களை விவாதிப்பவர். இப்படி இவருடைய நற்பண்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.  வாழ்வின் ஒரு பகுதியை சிறைச்சாலையில் கழித்துவிட்டு 10 ஆண்டுகளுக்கு பின் அவர் விடுதலை அடைந்துவிட்ட அதே நாளில் தான் எங்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. எங்களின் துயரங்கள் ஒருபுறம் இருக்க அவர் பெற்ற விடுதலையை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். ஏனென்றால் அவர் நோய்களினால் பட்ட அவதிகளும் கஷ்டங்களும் காண்கின்ற எங்களையே அது வாட்டுவதாய் இருந்தது என்றால் சர்க்கரை நோயையும், நீரிழிவு நோயையும் சுமந்திருக்கும் மாதனி அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் ? ஆனால் இன்று அவருடைய பிணை உச்சநீதிமன்றத்தால் கூட மறுக்கப்பட்டுவிட்டது எனும் பொழுது முஸ்லிம்கள் இந்திய நீதித்துறையின்மேலும், நீதிமன்றங்களின்மேலும் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்துகொண்டே போகிறது.

நீதியரசர் VR கிருஷ்ணய்யர் சொன்னார்: தாமதிக்கப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதியே.

அன்பு சொந்தங்களே சமுதாயம் விழித்திட வேண்டும் என முழக்கமிட்டவர் இன்று முடங்கி கிடக்கிறார். பிரிவினை என்னும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்ளும் நரிகளுக்கு முன்னாள் நம் சமுதாய ஒற்றுமையை காட்டுவோம். எந்தவொரு சூழ்நிலையிலும் நம் சமுதாய சொந்தங்களை மீட்டிட பாடுபடுவோம்.

அன்புடன்

முஹம்மது அன்சாரி,
High Security Block
Coimbatore Central Jail
Coimbatore

Note: Above letter was received personally from Mr. Muhammad Ansari (Gen. Secretary of Al-Umma Islamic Moment) and published at this site through Mr. Kovai Thangappa.
 

 

 
Read more…